நிலக்கரி ஊழல்
நிலக்கரி ஊழல்File Image

அதிமுக ஆட்சியில் நடந்த TANGEDCO ஊழல்: அமலாக்கத்துறை ஆய்வில் தெரியவந்த அடுக்கடுக்கான பகீர் உண்மைகள்!

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்திற்காக நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Published on

கடந்த ஆட்சியில் மின்சாரத்திற்காக நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின் அங்கிருந்து தமிழக துறைமுகங்களுக்கு கடல் வழியாக கொண்டுவரப்படுகிறது. அதன்பின் அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன் மற்றும் அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன், பொறியாளர் ஸ்ரீநிவாச சங்கர் உட்பட்ட ஐவர் குழு, ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த அதிகாரிகள் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட புகாரை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு காவல்துறை விசாரணை செய்தனர்.

அப்போது கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வர 2011இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை 1,267 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி வினியோக கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த காலக்கட்டத்தில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விசாகப்பட்டினம் தொழிலாளர் நல வாரியம் நிர்ணயித்த தொழிலாளர் சம்பளத்தில் பொய்யாக கணக்கு காட்டி இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்கி மீண்டும் கப்பலில் ஏற்றுவதற்கு 149 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு மின் உற்பத்தி வினியோக கழகம் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலக்கரி போக்குவரத்திற்கான இந்தத் தொகையில் 131 ரூபாய் என்ற அளவு குறைக்கப்பட்டது. அதுவும் இந்த தொகையானது துறைமுகத்தில் நிரந்தரமாக பணி புரியும் ஊழியர்களுக்கு பொருந்தும்.

இவ்வாறாக 2011 முதல் 2016 வரை நிலக்கரியை தமிழக துறைமுகங்களுக்கு கொண்டு வந்ததற்கான செலவு 1267 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தான் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தலைவர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய போது, இந்த காலக்கட்டத்தில் நிலக்கரி போக்குவரத்திற்கான செலவு ரூ.239 கோடி மட்டுமே சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தால் செலுத்தப்பட்டது என பதில் அளித்துள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் குறிப்பாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளே பணியில் இருந்ததால் அதை மறைத்துள்ளனர்.

மேலும் விசாகப்பட்டினத்தில் தீர்ப்பாயம் ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பான தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஆவணங்களை அடிப்படையாக வைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் அறப்போர் இயக்கம் சார்பில் இந்த மெகா ஊழல் வெளியாகி உள்ளது

மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்கவும் மீண்டும் கப்பலில் ஏற்றவும் நிரந்தர தொழிலாளர்களை பயன்படுத்தாமல் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு தற்காலிக பணியாளர்களை பயன்படுத்தி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

விசாகப்பட்டினம் துறைமுகத்தின் நிரந்தர தொழிலாளர்களையும் ஏமாற்றி, அனைத்தையும் மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு பொய்யாக கணக்கு காட்டி உள்ளது.

சிஏஜி ஆய்விலும் தமிழ்நாடு மின் உற்பத்தி விநியோக கழகம் அதிகாரிகள் எதையும் ஆய்வு செய்யாமல் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு விதிகளை மீறி பணத்தைக் கொடுத்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறைகேடானது 2001ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2001ஆம் ஆண்டு நிலக்கரி போக்குவரத்திற்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யும் போது, தற்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  தமிழ்நாடு மின் உற்பத்தி விநியோக கழக அதிகாரிகள் குழுவினர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளை வளைத்து ஒப்பந்தம் ஒதுக்கியது அம்பலமாகியுள்ளது.

மேலும் 2001ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற வெஸ்டர்ன் எனர்ஜி என்ற நிறுவனம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை ஒன்றையும் பெற்றுள்ளது. சென்னை சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடையை பொருட்படுத்தாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக அதிகாரிகள், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் நிலக்கரி போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

மேலும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் தடை பெற்ற வெஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து நாடகமாடி இந்த வழக்கை தாக்கல் செய்து தடையை வாங்கி இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடையை பொருட்படுத்தாமல் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் அதிகாரிகள் நிலக்கரி போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக 2001 முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் தலைமை பொறியாளராக இருந்த பழனியப்பன், இயக்குனராக இருந்த செல்லப்பன் மற்றும் அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன், பொறியாளர் ஸ்ரீனிவாச சங்கர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பழனியப்பன், இந்த மோசடிக்கு சாதகமாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த வெஸ்டர்ன் ஏஜென்சி நிறுவனம், அதன் நிர்வாகிகள் ராஜன் மற்றும் குஞ்சு கண்ணன் என 10 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் இந்த மோசடிக்கு தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறை தெரிவித்துள்ளனர்.

கடந்த 24-ம் தேதி முதல் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இச்சோதனை நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் முடிவில் டிஜிட்டல் சான்றுகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் தென்னிந்திய கார்ப்பரேஷன் கணக்குகளில் 360 கோடி ரூபாய் நிலையான வைப்புத்தொகையாக உள்ளது, அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்து 908 கோடி ரூபாய் மோசடி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த மெகா மோசடி தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் விரிவான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com