சபாநாயகர் தனபால் தலைமையில் நடைப்பெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஜூலை 30 வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற தமிழக சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடுகிறது. அதற்காக இன்று தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழக சட்டப்பேரவை வரும் 28 ஆம் தேதி முதல் ஜூலை 30 வரை சட்டப்பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டம் மொத்தம் 23 நாட்கள் நடைப்பெறயுள்ளதாகவும் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.