வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது என பீகார் அரசின் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநில அரசால் அனுப்பப்பட்ட குழுவினர் சென்னையில் வசிக்கும் பீகார் மக்களிம் உரையாடினர். பீகார் சங்கம் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட சென்னை வாழ் பீகார் தொழிலாளர்கள், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் பீகார் அரசால் அனுப்பப்பட்ட குழுவைச் சேர்ந்த பாலமுருகன், பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் சந்தோஷ் குமார் (STF - போலீஸ்)அதிகாரிகள் கலந்துகொண்டு கலந்துரையாடினர். கடந்த 4ம் தேதி தமிழகம் வந்த பீகார் குழுவினர் சென்னை, திருப்பூர், கோவை போன்ற வட மாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடினர். தமிழக காவல்துறை அதிகாரிகள் குடிமை பணி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக உரையாடிய பீகார் குழுவினர் இன்று மீண்டும் சென்னை வந்தனர். புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னையில் வசிக்கும் பீகார் சங்கத்தினர் சார்பாக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பீகார் மாநில மக்களுடன் உரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அரசின் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன்,
வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது. வதந்தி பரவிய விவகாரத்தில் பீகார் - தமிழ்நாடு அரசு இணைந்து சிறப்பாக செயலாற்றினோம். பீகார் தொழிலாளர்களிடம் ஆரம்பத்தில் பதற்றம் இருந்த நிலையில் தற்போது பயம் குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், கோவை சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நேரடியாக பீகார் மக்களிடம் உரையாடினோம். அதில் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சமின்றி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அதிகாரிகளிடம் பேசினோம். இவ்வாறு கூறினார். இன்று பீகாரருக்கு திரும்ப திட்டமிட்டுள்ள பீகார் அரசின் குழுவினர் தலைமைச் செயலாளர் இன்று சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.