சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை, சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச்சாலை அமைக்க சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறி விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்ப்பை எதிர்த்து சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட இயக்குநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோது திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி எந்த அடிப்படையில் அரசு மேற்கொண்டது என்றும், சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்டதா ? என்பன உள்ளிட்ட கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.
8 வழிச்சாலை திட்டத்தினால் வாகன நெரிசல் மற்றும் மாசு குறையும் என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. நிலங்கள் கையகப்படுத்திய பின், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றால் நிலம் வழங்கியோரின் நிலை என்னவாகும் என விவசாயிகள் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது. பல கட்டங்களாக நடைபெற்ற வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பினை வழங்குகிறது.