மதுரையில் இலவச மடிக்கணினி கேட்டு மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டபோது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் கடந்த 2017-18 காலகட்டங்களில் மேல்நிலைப் பயின்ற மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறனர். இந்தச் சூழலில் மதுரை பகுதியிலும் மாணவ, மாணவிகள் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு திடீரென 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது சில மாணவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால்,காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அந்த மாணவர்களை கலைத்தனர். இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்திற்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் தொடர்பாக 6 மாணவர்களை காவல்த்துறையினர் கைது செய்து அண்ணா நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.