உச்சபட்ச வேகத்தில் கடல்நீர்... கடலுக்குள் தூக்கிவீசப்பட்ட ரயில்... ஒரே இரவில் தனுஷ்கோடி அழிந்த கதை!

அமைதியே வடிவான கடலை மக்கள் ஆர்ப்பரிப்புடன் பார்த்த நேரத்தில், கடல் தனது ஆர்ப்பாட்டத்தைக் காட்டியதில் சர்வமும் ஒடுங்கிப்போனது.
தனுஷ்கோடி
தனுஷ்கோடிpt web
Published on

தமிழகத்தில் உள்ள அழகிய கடற்கரைகளில் ஒன்று தனுஷ்கோடி கடற்கரை. உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். மக்களின் சிரிப்பை கேட்கும் இந்நகரம் ஒரே ஒரு நாள் மக்களின் மரண ஓலத்தை கேட்டது. தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியது அந்த அழுகை.

தமிழ்நாட்டில் பாம்பன் தீவின் தென்கிழக்குப் பகுதியில் இருப்பது தனுஷ்கோடி. ஒருபக்கம் இந்தியப்பெருங்கடல், ஒருபக்கம் வங்காள விரிகுடா நடுவே நகரம் என அமைதியான பகுதி. அமைதியான கடல், கடலைச் சார்ந்த வாழ்க்கை, துறைமுகம், ரயில்வே ஸ்டேஷன், தபால் அலுவலகம், பள்ளிக்கூடம் என நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வந்தனர் அப்பகுதி மக்கள்.

ஒரே ஓர் இரவில் நடந்த சம்பவங்கள் ஒட்டுமொத்த ஊரையும் புரட்டிப்போட்டது. அந்த இரவு, டிசம்பர் 22, 1964 அன்று வந்தது. அதற்கு 5 நாட்களுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான சிறு காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 19 அன்று புயலாக மாறியது. டிசம்பர் 21 க்குப் பிறகு மேற்கு நோக்கி, ஒரே நேர்கோட்டில் கிட்டத்தட்ட 400 முதல் 550 கிமீ வேகத்தில் நகர்ந்தது. டிசம்பர் 22 அன்று புயல் தனுஷ்கோடியை அடைந்த நிலையில், 280 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. அலைகளோ கிட்டத்தட்ட 7 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வந்தது. 7 மீட்டர் என்பது கிட்டத்தட்ட 23 அடி.

கூரைகள் பிய்த்து எரியப்பட்டன. உச்சபட்ச வேகத்தில் ஊருக்குள் புகுந்த கடல்நீர் அனைத்தையும் சுருட்டுக்கொண்டு சென்றது. வீடுகள், கோவில்கள், தேவாலயங்கள் என எதுவும் மிச்சமில்லை. மறுநாள் காலை அனைத்தும் குப்பைகளாக சிதறிக்கிடந்தன.

புயலின் கோரத்தை அறியாமல் அந்த வேளையில் தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தது பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில். தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு ரயிலில் இருந்த பயணிகளையும் கடலுக்குள் கொண்டு சென்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தனுஷ்கோடி
தூத்துக்குடி - அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்... நடுவில் சிக்கிக்கொண்ட ரயில் - பயணிகளின் நிலை என்ன?

மறுநாள் காலை, உயிர் பிழைத்தவர்கள் கூட கண்ட முதல் காட்சி, அடித்துச் செல்லப்பட்ட நீரில் மிதந்து வந்த சடலங்களைத்தான். எங்கும் மரண ஓலம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுக்க சிறிது கால தாமதாம் ஆனது. தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியது தனுஷ்கோடி.

தனுஷ்கோடியில் தூக்கிவீசப்பட்ட ரயில்
தனுஷ்கோடியில் தூக்கிவீசப்பட்ட ரயில்

ராமேஸ்வரத்தில் இருந்து வந்த படகு ஒன்று கூடவே நிவாரண உதவிகளையும் கொண்டு வந்தது. பலர் ராமேஸ்வரத்திற்கு இடம்பெயர்ந்தனர். தகவல் அறிந்து தமிழகமே அதிர்ந்தது. அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் தனுஷ்கோடிக்கே வந்து பார்வையிட்டார். மீட்புப் பணிகள் நடந்தன. ராணுவமும் களத்தில் இறங்கியது.

தேசிய பேரிழப்பு என்றது ஐநா சபை. வாழத்தகுதியற்ற நகரம் என்றது அரசு. மக்கள் பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். பேரழிவு ஏற்பட்டு 59 வருடங்கள் ஆகியும் அதன் சாட்சியங்களாக இருக்கிறது அப்பகுதி.

புதிய தலைமுறை இதழில், ‘அதிர்ந்தது பூமி’ என்ற தொடரில், ‘கடல் விழுங்கிய தனுஷ்கோடி’ என்ற தலைப்பில் தொடரின் ஆசிரியர் எம்.பி. உதயசூரியன் எழுதிய கட்டுரையில் இருந்து நேரடி சாட்சியங்கள் மட்டும் புதிய தலைமுறை இணையத்திற்காக இங்கே இணைக்கிறோம்.

அதிர்ந்தது பூமி புத்தகம்
அதிர்ந்தது பூமி புத்தகம்

புருஷோத்தமனுக்கு அப்போது 14 வயது. புயலில் சிக்கிய அனுபவத்தை சொல்கிறார்: “நாங்கள் குடியிருந்தது ரயில்வே குவார்ட்டரஸில் அன்னிக்கு ராத்திரிதான் கப்பல் இர்வின் வந்து நின்னுச்சு. மெட்ராசுக்குப் போறவங்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்துட்டு வீட்டுக்கு போறப்பவே புயலும் மழையுமாய் ஒரே தண்ணிக்காடா இருந்துச்சு. நானும் எங்க அம்மா அப்பாவும் உசுரக் காப்பாத்திக்க மாடியில போயி நின்னுக்கிட்டோம். இந்த அலை சத்தத்தை கேட்டுக்கிட்டேதான் தினமும் சந்தோசமா தூங்குவோம். ஆனா அன்னைக்கு அதே அலை சத்தத்தைக்கேட்டு குலை நடுங்கிப் போயி முழிச்சிக் கிடந்தோம். அப்போ ஊய் ஊய்னு உசுரையே உலுக்குற மாதிரி கேட்ட கூச்சல் புயல் காத்தோடதா, இல்ல அந்த எமனோடதான்னு தெரியலங்க. விடுஞ்சு பாத்தா எங்க வீடுகள் எல்லாமே சேத்துலயும் தண்ணியிலயும் முக்கால்வாசி மூழ்கிக் கிடந்ததையும் கால் வைக்கிற இடமெல்லாம் பிணமாகக் கிடந்ததையும் இன்னைக்கு நினைச்சாலும் உடம்பே ஆடிப்போகும்” என தெரிவித்துள்ளார்.

அன்றைய பயங்கரத்தில் இருந்து உயிர் தப்பிய சைலாவதி கூறுகையில், “அன்னைக்கு கடலும் வானமும் ஒன்னா இருந்துச்சு. அலைகள் பனைமர உசரத்துக்கு வந்துச்சு. பொழச்சாலும் செத்தாலும் ஒன்னாவே இருப்போம்னு நானும் என் மனைவியும் ஒரு சேலையை எடுத்து ஒன்னா இருக்கிக் கட்டிக்கிட்டோம். திடீருன்னு கூரைய பிச்சிக்கிட்டு உள்ள வந்த தண்ணீ எங்களையெல்லாம் உருட்டிக்கிட்டு போச்சு. வாய், கண்ணெல்லாம் உப்புத்தண்ணியும் சேறுமாக அப்பிக் கிடந்துச்சு. நல்ல வேளையா அப்போ ஓங்கி அடிச்சபெருங்காத்து எங்கள கடல்ல இருந்து வெளிய தூக்கி போட்டுச்சு. உசுரு தப்புனது கடவுள் புண்ணியம்னு நினைச்சுக்கிட்டு உசரமாய் இருந்த ஒரு இடிஞ்ச சுவத்துல ஏறி, உசுர கையில பிடிச்சிக்கிட்டே விடிய விடிய உட்காந்து இருந்தோம். விடிஞ்சதும் சுத்திமுத்தி பிணங்களா மிதந்துக்கிட்டு போகுது. அப்புறம் அதுல தப்பிப் பிழச்சவங்க எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கிட்டு அழுததுல கண்ணீர் தீர்ந்து போச்சு” என தெரிவித்துள்ளார்.

இத்தனை கோரதாண்டவங்களை தமிழ்நாடு எதிர்கொண்டு இன்றோடு 59 ஆண்டுகளாகியும், இன்றும் அது ஏற்படுத்திச்சென்ற வடு அப்படியே மக்களின் மனதில் வேதனையாக இருக்கிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com