நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திலிருந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் பனிப்பொழிவு முடிந்து விடும் சூழலில், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்திலும் பனியின் தாக்கம் தொடர்கிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரத்யேக ஆடைகளை அணிந்து தற்காத்துக் கொள்கின்றனர். இதேபோல, பறவையினங்களும் கடும் பனியிலிருந்து தற்காத்துக் கொள்ள புத்திசாலித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. காக்கைகள் குதிரைகளின் மீது அமர்ந்து, குதிரைகளின் தடிமனான முடிகளை சேகரித்து வருகின்றன. இவற்றை தனது கூடுகளில் வைப்பதால் ஏற்படும் வெம்மையில், குளிரிலிருந்து குஞ்சுகளையும், முட்டைகளையும் பாதுகாத்துக் கொள்கின்றன.