கெங்கவல்லியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளி மான் ஒன்று, கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகலாம் வரையில் இல்லாத அளவில், வரும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பொதுவாக கோடைகாலம் வருவதற்கு முன்பாகவே, வெயில் வாட்டி வதக்க ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் கோடைகாலத்தை எதிர்கொள்ள மத்திய அரசும், மாநில அரசும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செயல்படுத்த மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கோடை காலத்திற்கு முன்பே வெயில் அதிகமாக பதிவாகி வருவதால், தண்ணீர் மற்றும் இறையைத்தேடி, மான்கள் மற்றும் வனவிலங்குள் ஊருக்குள் நுழைந்து வருவது வாடிக்கையாக மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 1ஆவது வார்டு வடக்குகாடு வனப்பகுதியில் இருந்து. தண்ணீர் தேடி ஆண் புள்ளி மான் ஒன்று ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது செந்தில் என்பவருடைய விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த மான், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைப்பார்த்த விவசாயி கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து உடனே நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஆண் புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மானின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.