எண்ணூர் அருகே எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில் பழவேற்காடு பகுதியில் எண்ணெய் திட்டுக்கள் கரை ஒதுங்குகின்றன.
எண்ணூர் கடற்கரை பகுதியில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் கடந்த இருவார காலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் காற்று மற்றும் நீரோட்டம் வடக்கு திசையை நோக்கி செல்வதால் எண்ணெய் திட்டுக்கள் பழவேற்காடு கோரைக்குப்பம் கடற்பகுதியில் பரவி காணப்படுகின்றன. இத்தனை நாட்கள் இல்லாமல் தற்போது எண்ணெய் படலம் பழவேற்காடு பகுதியில் ஒதுங்கியுள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். எண்ணெய் படல சர்ச்சையால் மீன் விற்பனை மந்தமான நிலையில், தற்போது கடலில் படிந்திருக்கும் எண்ணெய் படலத்தால் மீன் விற்பனை பெரிதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடலில் பரவும் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.