வங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு
வங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு
Published on

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியும், வங்கிகளிலேயே பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பொறியாளர் சுரேந்திரன் தனது சேமிப்பு கணக்கில் 8200 ரூபாய் பணம் செலுத்த, சீலநாயக்கன்பட்டியில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார். அங்கு எட்டாயிரம் ரூபாய்க்கு நோட்டுக்களாகவும், இருநூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் காசாளர் அவற்றை வாங்க மறுத்துள்ளார். 

பின்னர் கிளை மேலாளரை சந்தித்து முறையிட்டு சுமார் ஒருமணி நேரம் வரை காத்திருந்து அழுத்தம் கொடுத்த பின்னர் வேறுவழியின்றி பெற்றுக்கொண்டதாக கூறுகிறார் சுரேந்திரன். பின்னர் அருகிலுள்ள மற்றொரு வங்கிக்கு சென்று இதுகுறித்து விசாரித்த சுரேந்திரன், அங்கு நடந்த உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பது குறித்த புகாரினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணியிடம் மனுவாக கொடுத்தார்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என பலமுறை அறிவிக்கப்பட்டும் வங்கிகளே வாங்க மறுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் ஆட்சியர் ரோஹிணி. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகளே பின்பற்றவில்லை என்றால் கடைகள், பேருந்துகள் உள்ளிட்ட இடங்களில் எப்படி இவற்றை பயன்படுத்துவது. வங்கிகளே ரிசர்வ் வங்கியின் உத்தரவை மதிக்கவில்லை என்றால் சாமனிய மக்கள் என்னதான் செய்வார்கள். வங்கிகளின் இந்த நடவடிக்கையால் சாமனிய மக்களிடம் தேங்கிக்கிடக்கும்  செல்லாத நாணயங்கள் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற கேள்வியும் பலரால் முன் வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com