பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மரவனேரி பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் அருள் முருகன் என்பவரின் மகன் சரண்தேவ். ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் இந்த சிறுவன், கண்ணைக் கட்டிக்கொண்டு மூன்றாவது கண் திறன் மூலம் 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை பயணத்தை ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியிலிருந்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கண்களை கட்டியவாறு கோரிமேடு, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, திருவகவுண்டனூர், குரங்குசாவடி, ஐந்து ரோடு வழியாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் வரை நிர்ணயிக்கப்பட்ட 20 கிலோமீட்டரை லாவகமாக சைக்கிள் ஓட்டி ஒருமணி நேரம் மூன்று நிமிடங்களில் வந்தடைந்தார்.
சிறுவன் சரண்தேவின் இந்த முயற்சியை குளோபல் புக் ஆஃ ரெக்கார்டு சார்பில் சாதனையாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. 11 வயதில் கண்களை கட்டிக் கொண்டு சிறுவன் நிகழ்த்திய சாதனையை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.