முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை கவனிக்க வேண்டிய பொறுப்பு அப்போதைய முதலமைச்சர் ஓபிஎஸ் மௌனியாக இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தர்மம் செத்துப் போய் ஜெயலலிதாவும் மரணம் அடைந்தார் என கேபி.முனுசாமி பேசினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 51-வது ஆண்டு அதிமுக துவக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபிமுனுசாமி...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விசாரணை கமிஷன் வருகிறது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. யாரெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள் என நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தான் சொல்வதை தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என சசிகலா கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
பல நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வருகை தந்து ஜெயலலிதா உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு இருந்த இருதய கோளாறை சரி செய்ய ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறுகின்றனர். அதனை சசிகலா வேண்டாம் என மறுத்துள்ளார். அதனை மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மருத்துவர்களுக்கு என்ன தெரியும், அதை சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருந்திருக்க வேண்டும் அப்போது பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
அவர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முடிவுகளை அவர் எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனியாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவா சசிகலாவா என நினைத்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தான் முக்கியம் என அப்போது அமைதியாக இருந்துள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த செயலால் தர்மம் செத்து விடுகிறது. ஜெயலலிதா அவர்களும் இறந்து விடுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு காரண கருத்தாவே சசிகலா தான் என நீதியரசர் ஆறுமுகசாமி தெளிவாக எழுதியுள்ளார். 32 ஆண்டுகால ஜெயலலிதாவின் தோழி என சொல்லிக் கொண்டிருந்த சசிகலா இவ்வளவு பெரிய துரோகியாக செயல்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் புகழை ஆதாயமாக சசிகலா எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவை முன்னிறுத்தி பல்லாயிரம் கோடி ரூபாளை சசிகலா குடும்பம் சம்பாதித்துள்ளது. சாதாரண வீடியோ லைப்ரரி நடத்தி வந்த இவர்களுக்கு இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளது.
ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஒரு டீம் செயல்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின் அந்த டீம் சசிகலா கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. சிகிச்சை அளிக்க வேண்டிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சசிகலா கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. ஜெயலலிதாவை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை சசிகலாவுக்கு இல்லை என கே.பி.முனுசாமி பேசினார்.