விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஈ மொய்ப்பதுபோல் நலத்திட்ட பொருட்களையும், பிரியாணியையும் பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தென்னங்கன்றுகள், கல்யாண சீர்வரிசை பொருட்கள் மற்றும் அவர்களுக்கு பிரியாணியும் தயார் செய்யப்பட்டிருந்தது. சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.
அதுவரை பொறுமையாக இருந்த பொதுமக்கள் அவர் கிளம்பிய உடனே முண்டியடித்துக் கொண்டு சீர்வரிசை பொருட்கள்,தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்றனர். விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சிக்கன் பிரியாணி முழுமையாக தயாராகாத நிலையில் பிரியாணி அண்டாவை சூழ்ந்த பொதுமக்கள், ஆவி பறக்க பிரியாணியையும் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.
மேலும் ஒரு சிலர் கல்யாண சீர்வரிசை பொருட்கள் எடுத்துச் செல்லும்போது அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் பீரோவை தலையில் தூக்கிக்கொண்டு கரும்பு தோட்டத்திற்குள் மறைந்த நிகழ்வும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியில் போதிய பாதுகாப்பின்றி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாலும் பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவு ஈடுபடுத்தப்படாததாலும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்ட பொருட்களை அள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியது.