குடியிருப்பு அருகே அமைந்துள்ள நாய் பண்ணையால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பெண்கள் உட்பட ஏராளமானோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருக்கும் காலனி உள்ளது, அரசால் வழங்கப்பட்ட இந்தக் குடியிருப்பில் இரண்டு குடியிருப்புகளை நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த டாக்டர் மோசஸ் என்ற தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அதில் நாய் பண்ணை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இந்தப் பண்ணையில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் காரணமாகவும், நாய்கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதாலும் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு டெங்கு, அலர்ஜி, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குவதாகவும் குறிப்பாக குழந்தைகள் பெரும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் எழுப்பும் சத்தத்தால் தூக்கமின்மையும் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த நாய் பண்ணையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பெண்கள் உட்பட ஏராளமானோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் உடனடியாக பண்ணை அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.