ஊரடங்கில் வாகன தணிக்கைக்கு பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா திரையங்கம் சிக்னலில் போக்குவரத்து காவலர்களுக்கான மருத்துவ முகாமை புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் " பெருநகரை பொறுத்தவரை 115 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் நலனுக்காக அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே நடமாடும் மருத்துவக் குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறையினருக்கு மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக தேவை. சாலைகளில் வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்று வருகிறதா என கண்காணிப்பது காவல் துறையினரின் கடமை. அதை பொதுமக்கள் இடைஞ்சலாக பார்க்கக்கூடாது. மேலும் காவல் துறையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் காலை நேரங்களில் மக்களின் இடைஞ்சலை குறைக்கும் பொருட்டு ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்ல சாலைகளில் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வுகளால் போக்குவரத்து அதிகரித்தாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களை தாமதம் செய்யாமல் காரணத்தை கேட்டு காவல் துறையினர் அனுப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி மக்கள் தேவையான காரணங்களுக்காக மட்டும் வெளியில் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் கூறினார்.