கிருமிநாசினி சுரங்கங்களை அமைக்க வேண்டாம் என அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுச் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கிருமிநாசினி சுரங்கங்கள் மூலம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதில்லை எனத் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கிருமிநாசினி சுரங்கங்களுக்குச் சென்று திரும்பும் மக்கள் கை கழுவுதலைச் செய்வதில்லை என்பதால் அது பாதுகாப்பற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினியான ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை உடல் மீது பீய்ச்சினால் ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயனற்றதும் கூட என பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, கிருமிநாசினி சுரங்கங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.