சைவர்களுக்கு கோயில் என்றாலே சிதம்பரம் தான். ஆடலரசனாக அருள்பாலிக்கும் சிதம்பரம் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழாவின் 9 ஆம் நாளில் நடக்கும் திருத்தேரோட்டத்தில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள், அடியார்களின் போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் தேரோட்டத்திற்கு அனுமதியளித்தது. அதே சமயம் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்தது.
இதனால், மகிழ்ந்த சிவனடியார்களும், பக்தர்களும் கண்டேன் தில்லை கூத்தனை என மகிழ்ந்து தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். வழியெங்கும் கயிலை வாத்தியம் இசைத்து அடியார்கள், நடராஜருக்கு இசை மாலை சூட்டினர். தொடர்ந்து நாளை முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.