”நிர்வாக ரீதியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை எழுகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், ’எண்ணித் துணிக’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த preliminary மற்றும் main தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கேள்விகளை எழுப்பி ஆலோசனை பெற்றனர். குறிப்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்கள் குறித்தும், மாநில பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது குறித்தும், தேச நலன், மனித உரிமைகள், மொழிப் பிரச்சினைகளை அரசு நிர்வாகத்தில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் 3 மணி நேரத்திற்கு மேல் கேள்விகளை எழுப்பினர்.
இதில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ”நேர்முகத் தேர்வில் உங்களது திறமை முக்கியம் இல்லை. உங்களை எப்படி நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளப் (appearance) போகிறீர்கள் என்பதற்கான தேர்வுதான் நேர்முகத் தேர்வு. இதில் நல்ல ஆற்றலுடன், துடிப்புடன் இருக்க வேண்டும்; சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கேள்விகளுக்கான பதிலைச் சுருக்கமாகக் கூற வேண்டும். ஒரு கேள்விக்கு விடை தெரியாவிட்டால், தயங்காமல் ’தெரியாது’ என்று கூறலாம். அதில் தவறில்லை. எந்த கேள்விகளுக்கும் அவசரமாக பதில் அளிக்க வேண்டாம், நிதானமாகவே பதில் அளியுங்கள். செய்தித்தாளில் வரும் செய்திகள் ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட பார்வைதானே தவிர, அது முழுமையான உண்மையாக இருக்க முடியாது.
மத்திய அரசின் கருத்துபடியே நடந்து கொள்ளுங்கள்!
அதிகாரிகள் என்பவர்கள் வேறு; சமூக ஆர்வலர்கள் என்பது வேறு. மத்திய அரசுப் பணிகளுக்கு அதிகாரிகள்தான் தேவை. மனித உரிமை ஆர்வலர்களோ, தனி மனித சுதந்திரம் பேசுபவர்களோ தேவையில்லை. அதிகாரிகள் என்பவர்கள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். சமூக ஆர்வலர்களாக இருக்க கூடாது. அதிகாரிகள் உண்மைகளின் அடிப்படையிலும், ஆதாரங்களின்படியுமே செயல்பட வேண்டும். ஒரு சமூக ஆர்வலரைப்போல மற்றவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கும்போது, மத்திய அரசின் கருத்துப்படியே அனைத்து மாநிலங்களிலும் குடிமைப் பணி அதிகாரிகள் (IAS, IPS) நடந்துகொள்ள வேண்டும்.
’மத்திய அரசுப் பணிக்கு வருவதற்கு ஏன் விரும்புகிறீர்கள்’ என நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டால், மக்களுக்கு சேவை செய்ய என்று எல்லோரையும்போல பதில் செல்லாமல், ’சேவைக்காக மட்டும் மத்திய அரசுப் பணிக்கு வரவில்லை. மத்திய அரசுப் பணி என்பது சமூக கௌரவத்தையும், ஊதியத்தையும் தருவதாலும் இந்த பணியை நான் விரும்புகிறேன்’ என நேர்மையாகப் பதில் சொல்லுங்கள்.
மற்ற மாநிலங்களில் ஒன்றிய அரசு என கூறுவதில்லை!
நிர்வாகரீதியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சினை எழுகிறது. அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு என்று தமிழ்நாட்டில் சிலர் மொழிபெயர்த்து அழைப்பதுதான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில் ஒன்றிய அரசு என்று கூறி யாரும் பிரச்சினையை ஏற்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் காரணங்களுக்காக இப்படியான பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. எனவே, கலாசாரம் சார்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று கூற முடியாது. அதே நேரம் விலங்குகளுக்கும் பாதிப்பு இல்லாமல், வீரர்களுக்கும் பாதிப்பும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கலாம். அனைவருமே பல மொழிகளை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ் உயர்ந்த செம்மொழி.
இந்தியை படிப்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் உதவும்:
தமிழ் குறித்த பெருமிதம் தமிழக மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி மேலும் ஒரு மொழியைக் கற்றுத் தரலாம். அது, தமிழக மாணவர்களுக்கு உதவும். குறிப்பாக மத்திய அரசுப் பணிக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவும். ஓர் இந்திய மொழியைக் கூடுதலாக கற்றுக் கொள்வது அனைவருக்கும் பயன் தரும். அதேநேரம் இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி இந்திதான். எனவே இந்தியை கற்றுக் கொள்வது மாணவர்களுக்கு பெரியளவில் உதவும். இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால், இந்தியை படிப்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் உதவும்.
தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டவர்கள்
தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளின்படியே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் போராட்டங்கள் நடைபெறுவது இல்லை. இந்தியாவில் அனைத்து மாதிலங்களிலுமே போராட்டம் நடக்கிறது” என்றார்.