வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதனால், மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோடை கத்திரி வெயில் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே சில இடங்களில் மழையும் பெய்திருந்தாலும் வெப்பத்தின் தாக்கமே அதிகமாக காணப்பட்டதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதற்கிடையே தமிழகம் நோக்கி வந்த புயலும், ஒடிசாவிற்கு சென்றதால் அனல் காற்று வீச்சு தமிழகத்தில் அதிகரித்தது.
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான கோடை மழை பெய்யவில்லை. எனவே மழை பெய்தால் தான் தண்ணீர் கிடைக்கும் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாமக்கல், சேலம், மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துக் காணப்படுமெனக் கூறப்பட்டிருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகத்தின் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது