வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கே பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியனர். அந்தத் தடியடியில் மூன்று நபருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அங்கே மேலும் பதற்றம் அதிகமானது.
இதனை அடுத்து இந்தத் தகவல் பரவியதால் கிண்டி கத்திபாரா பகுதியில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். ஆகவே கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் செய்தியை அறிந்த சிலர் மதுரை மற்றும் தேனியில் தடியடியை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் கலவரம் அதிகரிக்காமல் இருக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தப் பேச்சுவார்த்தை தற்போது வரை நடந்து வருகிறது. கலவரம் அதிகரிக்காமல் இருக்க காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமாரி கல்வீச்சில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவருகிறார்.