மதுரையில் நீட் நுழைவுத்தேர்வு எழுதிய பின் ஊர் திரும்பிக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் மதுரைக்கு வந்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு, தனது தந்தையுடன் பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் திருப்புவனம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது,மாணவி சந்தியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக மாணவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி சந்தியா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நீட் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக மாணவியின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்புவனம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என (174-பிரிவு) வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவி சந்தியாவின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மாணவியின் உயிரிழப்பு பாப்பனம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாப்பனம் கிராமத்தில் இருந்து நீட் தோ்வு எழுத சென்ற முதல் பெண் சந்தியா ஆவார். மாணவி சந்தியாவுக்கு சுசித்திரா, நவனிதா மற்றும் முனீஸ்வரன் ஆகிய 3 உடன் பிறந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.