பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலாம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்ச வேலாம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் பெருமாள்சாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இவர்களது மகன் மௌனகுருசாமியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பட்டதாரியான மௌனகுருசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரது தாய் செல்லம்மாள் தனது மகனிடம் வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை தாயார் செல்லம்மாள் மௌனகுரு சாமியிடம் மீண்டும் அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மௌனகுரு தாயை சுவற்றின் மீது தள்ளிவிட்டு கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது தலையில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதானால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து மெளன குரு தப்பி ஓடிவிட்டார். இந்த சூழலில் இரவு 8 மணியளவில் உறவினர் வீட்டை திறந்து பார்த்த போது செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மௌனகுருசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து நடத்தி வருகின்றனர். மேலும் தாயை ஆத்திரத்தில் கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டதாக மெளனகுரு காவல்துறையினரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.