கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்திற்குள் புகுந்து பெண்களை லத்தியால் தாக்கிய உதவி ஆய்வாளரின் செயல் சாத்தான் குளம் சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது உணவகத்திற்கு வந்த ஓசூரை சேர்ந்த 5 பெண்கள் தங்களுக்கு மிகவும் பசிப்பதாக கூறியதை அடுத்து, உணவகத்தின் ஷட்டரை பாதி அளவு அடைத்துவிட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியான நிலையில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை” என்று பதிவிட்டுள்ளார்.