ஊரடங்கில் தளர்வுகள் நடைமுறையில் இருந்தாலும், கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதார வேதனை தீரவில்லை. சலங்கையை அடகு வைத்து பசியைப் போக்கிக்கொள்ளும் அவல நிலையில் இருக்கிறார்கள் இந்த எளிய கலைஞர்கள்.
காலில் சலங்கை கட்டினால்தான் வயிற்றின் பசி ஓலத்தை தீர்க்க முடியும். உச்சகதியில் குரல் எடுத்தால்தான் இவர்களின் குடும்பத்தினரின் பட்டினியை மறைக்க முடியும். ஆனால் அதற்கான சூழல் இன்னும் இவர்களுக்கு வாய்க்கவில்லை. நாட்டுப்புற கலைகளாக அரசு அங்கீகரித்துள்ள கரகம், நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட 100 வகையான கலைகளில் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் உள்ளனர்.
முதல் அலை தொடங்கி இப்போது வரை கடந்த 2ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கூறும் இந்த கலைஞர்கள், சலங்கையை கூட அடமானம் வைத்து பசியாறுவதாக கூறுகிறார்கள். பல தலைமுறையாக கரகாட்டம் ஆடும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த இந்த கலைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த பேரிடர்காலத்தில் கரை சேர முடியாமல் தத்தளிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள் இந்தக் கலைஞர்கள்.