அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நுரையீரலில் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது செவிலியர்களின் பாதங்களில் மல்லிகை பூவை தூவி நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஐசுலேசன் வார்டில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆரம்ப கட்டத்தில் இருமலுடன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட அவர், தொடர் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்தார்.
இவர் மருத்துவமனையில் இருக்கும் போது இவரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கு நல்ல முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்த வழக்கறிஞர் மணிமாறன், செவிலியர்களை வெளியே வரச்சொல்லி இரண்டு செவிலியர்களின் பாதங்களிலும் மல்லிகைப் பூவை தூவி கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
அப்போது செவிலியர்களிடம் மணிமாறன், தன்னை எந்த அளவிற்கு கவனித்துக் கொண்டீர்களோ அதுபோல இங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தார். வீட்டிற்கு சென்ற பிறகு நல்ல உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் செவிலியர்கள் மணிமாறனுக்கு ஆலோசனை வழங்கினர்.