பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்க மறுப்பதாக கூறி, சேலத்தில் குதிரை மீது அமர்ந்து வந்து ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் இந்த பத்து ரூபாய் நாணயங்களை கடைகள், பேருந்துகள், சந்தைகளில் வாங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து இடங்களிலும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பார்த்திபன் என்பவர், பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்க மறுப்பதாக கூறி குதிரை மீது அமர்ந்துக்கொண்டு, கையில் தேசியக்கொடியுடன் மனு ஒன்றை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதனைக்கண்ட காவல்துறையினர், பார்த்திபனை தடுத்து நிறுத்தினர். மேலும், குதிரையை விட்டு இறங்கி ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர்.