நாகை மாவட்டத்தில், கஜா புயலின்போது வேரோடு மண்ணில் சாய்ந்த பழமையான ஆலமரத்தை, கிராம மக்கள் மீண்டும் நட்டு வைத்து உயிர்ப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. இதில், வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் - உச்சக்கட்டளையில் இருந்த இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. திரௌபதி அம்மன் கோயிலில் இருந்த அந்த மரம் கிராமத்தின் அடையாளமாகவே இருந்தது.
பழமையான இந்த மரத்தை மீட்டெடுக்க முடிவு செய்த கிராம மக்கள், சொந்த செலவில் இரண்டு கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நடும் பணிகளில் ஈடுபட்டனர். 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆலமரம் நிமிர்த்தப்பட்டு, மண்ணில் நட்டு வைக்கப்பட்டது. ஆலமரத்தை உயிர்ப்பிக்க, அவர்கள் 50 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள்ளனர்.