18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை..

18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை..
18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை..
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 19 பேர், அப்போது தமிழக ஆளுநர் பதவி வகித்த வித்யாசாகர் ராவிடம் 2017 ஆகஸ்ட் 22ம் தேதி மனு அளித்தனர். இதையடுத்து 19 பேரிடம் விளக்கம் கேட்டு அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல் தாமாக முன் வந்து அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் ராஜேந்திரன் கடந்தாண்டு‌ ஆகஸ்ட் 24ம் தேதி புகார் அளித்தார். 

2017 ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் கடந்தாண்டு செப்டெம்பர் 17ம் தேதி சபாநாயகரைச் சந்தித்து டிடிவி தரப்பினர் வற்புறுத்தி ஆளுநரை சந்திக்க அழைத்துச் சென்றதாகக் கூறி முதல்வர் பக்கம் திரும்பினார். மீதமுள்ள 18 எம்எல்ஏக்களும் உரிய விளக்கம் அளிக்காததால், அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டார். 

சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை செப்டெம்பரில் உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி விசாரித்தார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற பணி சுழற்சி நடவடிக்கைக் காரணமாக அக்டோபரில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவிடம் விசாரணைக்குச் சென்றது. நவம்பர் 2ம் தேதி இந்த வழக்கு அரசியலமைப்புச் சார்ந்தது என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்தார். 

இதையடுத்து நவம்பர் 16ம் தேதி முதல் அந்த வழக்கினை உயர்நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் இறுதியில் கடந்த ஜூன் 1‌4ஆம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதிநீக்கம் செல்லும் என்றும், மற்றொரு நீதிபதியான சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பினை வழங்கினர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால் வழக்கு 3ஆவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

இதனை அடுத்து உயர்நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதி விமலா 3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ.க்கள் அவரை வழக்கு விசாரணையில் இருந்து மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், நீதிபதி சத்தியநாராயணனை 3ஆவது நீதிபதியாக பரிந்துரைத்தது. இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன், ஜூலை 23ஆம் தேதி முதல் 12 நாட்கள் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com