வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், கடலூரில் 40 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.
தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் பனை மரங்கள் அழிவில் விளிம்பில் இருந்து வருகின்றன. கைவிணைப் பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்காற்றும் பனையை அழிவில் இருந்து மீட்க பல அமைப்புகள் தமிழத்தில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. பதநீர், நுங்கு,பனங்கிழங்கு போன்ற இயற்கை உணவு பண்டங்கள் பனையில் இருந்து கிடைக்கின்றன. விசிறி, கூடை போன்றவை பனையில் இருந்து தயாராகின்றன. ஆக பல பயன்பாட்டுக்கு உதவும் பனையை காக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது கடலூர் மாவட்டம்.
தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் தொகுதி நிதியிலிருந்து இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. பட்டாம்பாக்கத்திலிருந்து கடலூர் வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கஸ்டம்ஸ் சாலையில் 40 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்படவுள்ளது. தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பலகோடி மரங்கள் அழிந்த நிலையில், பசுமைக் கடலூர் என்ற பெயரில் மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.