கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு வரும் பொதுமக்கள் பலரும் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இவ்விவகாரத்தில் அதிகாரிகள் துரிதமாக செயல்படவும் அறிவுறுத்துகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் 20,000 கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த மேல் நிலை நீர்தேக்க தொட்டி பாலடைந்து உடைந்து கீழே விழும் தருவாயில் உள்ளது. நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப சுகாதார வளாகத்தின் முகப்பிலேயே இந்த மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமையப்பெற்றுள்ளதால் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேல் நிலை நீர் தேக்க தொட்டியின் 4 பில்லர்களும் உடைந்து கம்பிகள் தெரியும் வண்ணம் உள்ளது. தொட்டியை ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பதும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆபத்து நடக்கும் முன்னர் தொட்டியை இடித்து தள்ளிவிட்டு அதே இடத்தில் புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைத்துக்கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.
- கணேஷ்