வரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

வரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
வரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
Published on

வாகன ஓட்டிகள் வரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 1 ஆம் தேதி நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன சட்டப்பிரிவு 139-இன் படி, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என நீதிபதி கூறினார். மேலும், “மழை போன்ற காலங்களில் ஆவணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. அப்பொழுது அதனை பாதுகாப்பது கடினம். இயற்கை சீற்றங்களின்போது சேதமடைந்தால் யார் பொறுப்பு?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வரும் 5 ஆம் தேதி வரை கட்டாயப்படுத்தப்படாது என்று தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார். எனவே அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வரும் 6 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் அசல் ஓட்டுநர் உரிமத்தை தொலைக்காமல், பாதுகாப்பாக வைத்திருப்பது உரிமையாளர்களின் கடமை என தெரிவித்த உயர்நீதிமன்றம், வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்க அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com