வாணியம்பாடி அருகே பாலாற்றில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நீரில் மூழ்கிய இளைஞர் சடலத்தை 2 மணி நேரத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நடுபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர், இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது பாலாற்று நீரில் இறங்க முற்பட்டபோது கால் தவறி நீரில் விழுந்து மூழ்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியுள்ள ராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் அதிக அளவில் பள்ளங்கள் இருந்ததாலும் 9 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததாலும் அவரை மீட்க முடியாமல் போராடினர்.
2மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின்னர் அவரை சடலமாக மீட்டனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.