முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது : மூவர் கண்காணிப்புக்குழு தகவல்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது : மூவர் கண்காணிப்புக்குழு தகவல்
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது : மூவர் கண்காணிப்புக்குழு தகவல்
Published on

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும் அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ற கசிவுநீர் வெளியேற்றமும், மதகுகள் இயக்கமும் சீராக இருக்கிறது எனவும் மூவர் கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன் ராஜ் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் ஒன்பது மாதங்களுக்குப்பின், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும் மூவர் கண்காணிப்பு குழு தலைவருமான குல்சன்ராஜ் தலைமையில் ஆய்வு நடந்தது. அதில் தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் அரசு முதன்மை செயலர் பிரபாகரன் மற்றும் கேரள அரசு பிரதிநிதியாக கேரள அரசின் நீர்பாசனத்துறை அரசு செயலர் அசோக் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர். அப்போது பிரதான அணை மற்றும் பேபி அணை ஆகியவை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. அணையின் 13 மதகுகளில் மாதிரிக்காக முதல் மதகு இயக்கி சரிபார்க்கப்பட்டது. அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கப்பகுதியில் இருந்து வழியும் அணையின் கசிவு நீரின் அளவு சரிபார்க்கப்பட்டது. அதில் நிமிடத்திற்கு 17 லிட்டர் அணையில் இருந்து வெளியேறுவது கண்டறியப்பட்டு, அது அணையின் நீர்மட்டம் 112 அடிக்கு ஏற்றாற்போல் இருப்பதால் அணை பலாமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் குமுளியில் உள்ள மூவர் கண்காணிப்புக்குழு அலுவலகத்தில் மூவர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பேபி அணையை பலப்படுத்துதல், அதற்காக 29 மரங்களை வெட்டுதல், அணைக்கு 19 ஆண்டுகளாக வழங்கப்படாத மின்சாரம் வழங்குதல், வல்லக்கடவு முதல் முல்லைப்பெரியாறு அணை வரையிலான 6 கிலோமீட்டர் சாலை சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதோடு கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பருவமழைக்காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்குப்பின் குமுளியில் செய்தியாளர்களிடம் பேசிய முவர் கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன்ராஜ் பேசும் போது, “அணை பலமாக இருப்பதாகவும், அணையிலிருந்து வழியும் கசிவு நீரின் அளவும், மதகுகள் இயக்கமும் சீராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, அணைக்கு மின்சாரம் வழங்குதல், பேபி அணையை பலப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com