2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்

2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்
2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்
Published on

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாயை கண்டுபிடித்து போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பல்லவன் சாலையை சேர்ந்த லதா(36) என்பவரிடம் 2 வயது பெண் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொடுத்துவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த லதா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவமனை முழுவதும் தேடியும் அந்தப் பெண் கிடைக்காததால் குழந்தை பாதுகாப்பு அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைக்கு தீக்காயம் இருந்ததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது ஏற்கெனவே அந்த குழந்தை தீக்காயத்திற்காக சிகிச்சை பெற்று சென்றதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவ நிர்வாகத்திடம் விசாரித்த போது அந்த குழந்தையின் பெயர் மோனிஷா என்பதும் அவரது தாய் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ரம்யா (25) என்பதும் தெரியவந்தது. பின்னர் ரம்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்தனர். 

ரம்யாவிடம் மேற்கொண்ட விசாரணையில் முதல் கணவர் இறந்துவிட்டதால் இரண்டாவதாக சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அப்பளம் பொறித்த எண்ணெய் சட்டியை கணவர் தட்டிவிட்டதால் குழந்தை மீது கொட்டி தீக்காயம் ஏற்பட்டதால் எழும்பூர் மருத்துவமனையில் 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்க வந்ததாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் காவலாளி பழக்கம் என்பதால் அவரை அழைத்து வருவதற்காக குழந்தையை மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். பின்னர் குழந்தையையும் ரம்யாவையும் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com