செஞ்சி அருகே விசாரணைக்கு அழைத்து வந்த ஒருவர் சிறுநீர் கழிப்பதாகக் கூறி காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சூரப்பந்தங்கள் கிராமத்தைச் சார்ந்த 18 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, வன்கொடுமை செய்துவிட்டதாக அவரது தாய் மீனாட்சி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
இன்று அதிகாலை வாகனத்தில் அழைத்துக் கொண்டு வரும்nபோது, வெங்கடேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாகக் கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கல்போரின் மேல் ஏறி மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் மீனாட்சி என்பவர் சம்பத் மற்றும் ராமலிங்கம் மீது மட்டுமே புகார் கொடுத்ததாகவும் வெங்கடேசனை போலீசார் எதற்கு அழைத்து வந்தார்கள் என தெரியவில்லை என்றும் அவர் தற்கொலைக்கு போலீஸ் தான் காரணம் என உடலை வாங்க மறுத்து வெங்கடேசன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறந்த உடலை போலீசார் அங்கிருந்து எடுத்து செல்லவும் விடாமல் வெங்கடேசன் உறவினர்கள் போராடியதால் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்பு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மரத்தில் தூக்கிட்டு நிலையில் இருந்த வெங்கடேசனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.