விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சண்முகபிரியா (30). இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அவிநாசி சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திருமுருகன் பூண்டியில் இருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சண்முகபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சன்முகபிரியாவின் கணவர் தியாகராஜன் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு தியாகராஜன் மற்றும் உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்ததாக கம்மல் மற்றும் தோடு ஆகியவை தியாகராஜனிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சண்முகபிரியா தாலிக்கொடி மற்றும் மூன்றரை பவுன் செயின் அணிந்து இருந்ததாகவும் அவை எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ஒருவரை நேற்றிரவு கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவரை அனுப்பி விட்டதாகவும் லாரி எங்கே இருக்கிறது. கைது நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை என்பது குறித்த தகவலையும் காவல்துறையினர் கூற மறுப்பதாகவும் நகைகள் காணவில்லை என்பதை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட போலீசார் மறுப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விபத்தில் உள்ள சந்தேகங்களை காவல்துறையினர் தீர்க்கும் பட்சத்தில் உடலை பெற்றுக் கொள்வதாகவும் கூறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நகைகள் மாயம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.