‘இனிமேல் அமைதியைக் குலைக்கும் வகையில் பேச மாட்டேன்’ - பாதிரியார் பொன்னையாவிற்கு ஜாமீன்

‘இனிமேல் அமைதியைக் குலைக்கும் வகையில் பேச மாட்டேன்’ - பாதிரியார் பொன்னையாவிற்கு ஜாமீன்
‘இனிமேல் அமைதியைக் குலைக்கும் வகையில் பேச மாட்டேன்’ - பாதிரியார்  பொன்னையாவிற்கு ஜாமீன்
Published on
அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசிய வழக்கில் சிறையிலிருக்கும் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனையின்படி, அவர் தினமும் திருச்சி, தில்லைநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். மேலும் ‘இனிமேல் அமைதியைக் குலைக்கும் வகையில் பேச மாட்டேன்’ என பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் இறப்பிற்கான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசியபோது அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசியதாகவும், பூமி தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது.
சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன். இதயநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிடவேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், “மனுதாரர் எவ்விதமான விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ, யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ பேசவில்லை. அவர் பேசியதன் சில பகுதிகள் மட்டும் தவறான நோக்கில் பரப்பப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். ‘யாரும் எவ்விதமான தீவிரவாதத்தையும் கையில் எடுக்கக்கூடாது; இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உறவினர்கள் போல இருக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்துக்களையும் தெரிவித்து உள்ளார். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலேயே இந்த விவபரங்கள் உள்ளன. அந்தவகையில் தவறான நோக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்கள் மட்டும் பரப்பப்பட்டுள்ளன. மனுதாரர் வயது முதிர்ந்தவராகவும், இதயநோயாளியாகவும் இருப்பதால், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, "மனுதாரர் வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் வரும் காலங்களில் மனுதாரர் இதுபோல மதம் மற்றும் அரசியல் பிரச்சனைகளை தூண்டும் வகையிலோ, அமைதியை குலைக்கும் வகையிலோ பேசக்கூடாது. ஆகவே ‘இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்’ என மனுதாரர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனைகள் விதித்து, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com