’மெட்ராஸ் சென்னை ஆனது.. பெயர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்..’ - நீதிமன்றம்

’மெட்ராஸ் சென்னை ஆனது.. பெயர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்..’ - நீதிமன்றம்
’மெட்ராஸ் சென்னை ஆனது.. பெயர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்..’ - நீதிமன்றம்
Published on

'ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது' எனத் தெரிவித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில், "துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பேருந்து நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் குடும்ப அட்டை, வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் காமராஜர் பேருந்து நிலையம் என்றே உள்ளது. இந்நிலையில் காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்ற மக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே, காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக் கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது எனவும், காமராஜர் பேருந்து நிலையம் என்றே தொடரவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு, "ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ராஸ், சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டோம். மாற்றங்களை ஏற்கப்பழக வேண்டும்" என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிக்கலாம்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பணி நிரந்தரம் செய்க’ - போராடிய செவிலியர்கள் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com