கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு வழங்கப்பட்ட தலா 3 ஆயுள் தண்டனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது.
சிவகங்கை வாரச்சந்தை சாலையில் வசித்து வந்தவர் கதிரேசன். இவர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தார். இவரது சொந்த ஊர் பெரியகண்ணனூர் அருகே உள்ள பகையஞ்சான். அங்கு அவரது பெற்றோர் வசித்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து பெற்றோரை பார்க்க, கதிரேசன் அவரது மகன் பிரசன்னா மற்றும் மகள் நிகிலா ஆகியோருடன் பகையஞ்சானுக்கு காரில் சென்றுவிட்டு இரவே ஊர் திரும்பினர். காரை வல்லனியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, ஊத்திகுளம் அருகே காரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல் காரில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, டிரைவர் பூமிநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். மகள் நிகிலா மட்டும் காயத்துடன் தப்பினார்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. விசாரணையில், பெரிய கண்ணனூர் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பெரியகண்ணனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் அவரது மகன்கள் அக்னிராஜ், லெனின், மற்றும் யோகநாதன், சத்யராஜ், பால் பாண்டி, சிவக்குமார், கரந்தமலை, கணேசன், ஜெயக்குமார், உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அர்ச்சுனன், இவரது மகன்கள் அக்னிராஜ், லெனின் மற்றும் சத்யராஜ், பால்பாண்டி, சிவகுமார், யோகநாதன், விஜயகுமார், கரந்தமலை, கணேசன், ஜெயகுமார் ஆகிய 11 பேருக்கு மூன்று கொலைக்காக தலா 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தங்கக்கனி உத்தரவிட்டார். அர்ச்சுனனின் மற்றொரு மகன் மதனகோபால் உட்பட 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தத் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும் தண்டனை வழங்க கோரி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.