கடும் எதிர்ப்புகளுக்கிடையே நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி - அடுத்தது என்ன?

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி - அடுத்தது என்ன?
கடும் எதிர்ப்புகளுக்கிடையே நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி - அடுத்தது என்ன?
Published on

சிறுபான்மையினர் குறித்து விக்டோரியா கவுரி பேசிய வெறுப்புப் பேச்சுக்குப் பிறகு, இந்த மதங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் அவர் மீது நம்பிக்கை வைப்பார்களா? எனக் கேள்வியெழுப்புகின்றனர் அவரது நியமனத்தை எதிர்ப்பவர்கள்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. ‘இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டது.

விக்டோரியா கவுரி பாஜகவின் அகில இந்திய மகளிரணி செயலாளராக இருந்தவர். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசி சர்ச்சைகளில் சிக்கியவர். ஆகையால் விக்டோரியாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என என்ஜிஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கினர். விக்டோரியா நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

விக்டோரியா நியமனத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தைப் போலவே, விக்டோரியா நியமனத்துக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை சேர்ந்த 54 வழக்கறிஞர்கள் ஒரு கடிதத்தை கொலீஜியத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், ''இதற்கு முன்பு வழங்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளான பலரும் அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.

ஆனால் விக்டோரியா கவுரி நியமனத்தின்போது மட்டும் விமர்சனம் செய்கின்றனர். அவரின் நியமனம் அரசியல் ரீதியாக நடக்கவில்லை. இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழங்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் பக்க சார்பின்றி நியாயமாகத் தங்களது சட்டப் பணிகளைச் செய்துள்ளனர்'' என்று ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்

அரசியல் சார்புடையவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது இது முதல்முறை இல்லை என்றாலும், கவுரியின் விவகாரத்தில் அவருடைய சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுதான் பிரச்சனையாக உள்ளது என பதில் கொடுக்கின்றனர் அவரது நியமனத்தை எதிர்ப்பவர்கள். இஸ்லாமியர்கள் குறித்தும் கிறிஸ்தவர்கள் குறித்தும் அவர் பேசிய வெறுப்புப் பேச்சுக்குப் பிறகு, இந்த மதங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் அவர் மீது நம்பிக்கை வைப்பார்களா? எனக் கேள்வியெழுப்புகின்றனர் விக்டோரியா நியமனத்தை எதிர்ப்பவர்கள்.

இதனிடையே நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதனால் விக்டோரியா கவுரி தனது பதவியை தொடர்வதில் எந்த தடையும் இருக்காது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com