“லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை” - உயர்நீதிமன்றம்

“லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை” - உயர்நீதிமன்றம்
“லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை” - உயர்நீதிமன்றம்
Published on

லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஊழலை அறவே நீக்கும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 

இந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் பொது விவகாரங்களில்  ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், முதலமைச்சர்,  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும் அவற்றை முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. 

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்தது.லோக் ஆயுக்தா சட்டம் பிரிவு 3ன் படி லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுபவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு துறை ஆகிய ஏதேனும் ஒன்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவராகவோ இருக்க வேண்டும். அவர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும், இருவர் சட்டத்துறையில் சாராதவர்களாக இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் எவ்விதமான அரசியல் கட்சி தொடர்பு உள்ளவராக இருக்க கூடாது.

இந்நிலையில் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாசையும் அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்டம் நீதிபதிகள் ஜெயபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர். 

அதேபோல டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோரையும் உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர். இது லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது அரசியல் தொடர்புடைய ஒருவரும், நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ஒருவரும், லோக் ஆயுக்தாவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்க இயலாது, இது விதிகளுக்கு எதிரானது. 

ஆகவே, அவர்களை உறுப்பினர்களாக நியமித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதோடு, அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விதிப்படி உரிய தகுதி உடைய உறுப்பினர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ் சுந்தர் அமர்வு ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகிய  இருவரின் நியமனத்திலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இருவரின் நியமனத்திற்கும்  இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். 
 
மேலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com