கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், வேல் நகர், 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (70) மற்றும் இவரது மனைவி அஞ்சலாட்சி (60). இவர்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இவரது உறவினர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது சமையல் அறையில் இரண்டு பேரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மதுரவாயல் முத்துராமலிங்கம் தலைமையில் வந்த போலீசார் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த மூன்று தினங்களாக அஞ்சலைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து விட்டு வந்த போது தங்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்திலும் கொரோனா பரிசோதனை செய்தால் மனைவியை தனியாக பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இவர்களுக்கு கடந்த 3 தினங்களாக இவர்களது உறவினர்கள் சமையல் செய்து கொடுத்து வந்தனர். உணவு கொடுக்க வரும் போது தான் இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. வயதான தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)