ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் மணிகண்டா. இவருடைய மனைவி துர்கா. இவருக்கும் சோனு என்ற நபருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. துர்கா, சோனுவுடன் சித்தூர் மாவட்டம் அருகே உள்ள பாக்கரா பேட்டையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் தன் மனைவியைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்த மணிகண்டாவுக்கு அவர் இருக்கும் இடம் தெரியவந்ததுள்ளது. மனைவியை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்த மணிகண்டா திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி காவல் நிலையத்திற்குச் சென்று பாக்கராபேட்டையில் சோனுவுடன் வசித்து வரும் தன் மனைவியை மீட்டுத் தரக் கோரி புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.
அங்கு பணியிலிருந்த காவலர் சீனிவாஷ் என்பவர் அலட்சியமாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது. மேலும் இங்கு வந்து புகார் கொடுக்க முயன்றால் "உன்னைத் தூக்கி உள்ளே போட்டு நரகம் எப்படி இருக்கும் என்பதை நான் உனக்கு இங்கேயே காண்பித்து விடுவேன்" என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த மணிகண்டா அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பெட்ரோல் பாட்டிலுடன் காவல்நிலையம் முன்பு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு காவல்நிலையம் நோக்கி ஓடி வந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேரமாகப் போராடி அணைத்தனர். பின்னர் 80% தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர். மேலும் புகார் கொடுக்க வந்த மணிகண்டாவிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியைச் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலையம் முன்பு கணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.