‘ரத்த வெள்ளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தண்ணீர் கேட்டதாக சொன்னார்’:காவலர் ரேவதியின் கணவர்

‘ரத்த வெள்ளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தண்ணீர் கேட்டதாக சொன்னார்’:காவலர் ரேவதியின் கணவர்
‘ரத்த வெள்ளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தண்ணீர் கேட்டதாக சொன்னார்’:காவலர் ரேவதியின் கணவர்
Published on

சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலரின் கணவர் புதிய தலைமுறைக்குப் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சாத்தான்குளம் தலைமை பெண் காவலர் ரேவதியின் சாட்சியம் அமைந்துள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில், ரேவதி அங்கிருந்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததாகவும், சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டதாகவும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலரின் கணவர் புதிய தலைமுறைக்குப் பிரத்யே பேட்டி அளித்துள்ளார். பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை அவர் அந்தப் பேட்டியில் விளக்கியுள்ளார். சம்பவம் நடந்த நாள் அன்று காவல்நிலையத்தில் இருந்த மனைவியிடம் தொலைபேசியில் பேசியபோது யாரோ சிலரை உள்ளே வைத்து அடித்து கொண்டிருக்கிறார்கள். நான் இன்னும் காவல்நிலையத்திற்குள் செல்லவில்லை என்று அவரது மனைவி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தண்ணீர் கேட்டதாக என் மனைவி வருத்தத்துடன் கூறினார். 10 மணியளவில் தொலைபேசியில் பேசிய போது, காவல்நிலையத்தில் சென்ற போது இருவரையும் இருவரையும் அடித்துக் கொண்டு இருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார். உயிரிழப்பு தகவல் அறிந்து என மனைவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். எனது மனைவிக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்றேன். எனது மனைவிக்கு, எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். நானும் மனைவியும் வெளியே வேலைக்கு செல்கிறோம். ஆகவே பாதுகாப்புத் தேவை. நீதிமன்றம் சொன்னபடி பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு அளித்தால் நடந்த உண்மையை நானும் என் மனைவியும் எங்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே சிபிசிஐடி காவல்துறையின் சாத்தான்குளம் பெண் காவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com