தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவை ஆகம விதிப்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. மன அமைதியை அதிகரிக்கும் நோக்கிலேயே ஆலயங்கள் ஆகம விதிகளின் அடிப்படையில் கட்டப்படும். இவ்வாறு சைவ ஆகம விதிகளின்படி கட்டப்படும் கோவில்களில் பூஜை உள்ளிட்ட அர்ச்சனைகள் தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகளும் உள்ளன.
குறிப்பாக பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியிலேயே தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு நிகழ்வுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. 1997 ல் ஜூன் 7ல் கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தியபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டு 40 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்துக்கள் ஏற்பட்டன.
இதற்கு ஆகம விதிப்படி தமிழில் அல்லாமல் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தியதே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. குடமுழுக்கு நிகழ்வினை தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டுமென தமிழ் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்களின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசிடம், தமிழர் கட்சி சார்பிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மன்னன் ராஜராஜ சோழனால், கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவானது தமிழ் மொழியிலேயே நடத்தப்பட வேண்டும். இதற்கான சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில், சைவ அர்ச்சனை பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு இந்த குடமுழுக்கு விழாவினை நடத்தலாம். இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழாவினை தமிழ் மொழியிலேயே நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, கடைசியாக குடமுழுக்கு விழா எந்த மொழியில் நடத்தப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் சமஸ்கிருதத்தில் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்போது தமிழில் அர்ச்சனை செய்ய நபர்கள் இல்லை. ஆனால் தற்போது, சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில், சைவ அர்ச்சனை பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு நடத்தலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்து அறநிலையத்துறை சார்பில், ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறையின் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.