பெரியார் பேரணி குறித்து 1971-ல் வெளியான செய்தி என்ன? - 'தி இந்து' விளக்கம்

பெரியார் பேரணி குறித்து 1971-ல் வெளியான செய்தி என்ன? - 'தி இந்து' விளக்கம்
பெரியார் பேரணி குறித்து 1971-ல் வெளியான செய்தி என்ன? - 'தி இந்து' விளக்கம்
Published on


பத்திரிகைகளில் தாம் படித்ததையும் கேள்விப்பட்டதையும் வைத்தே 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணி குறித்து பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில், ‘ தி இந்து’ ஆங்கில நாளிதழில் அந்நாட்களில் வெளியான செய்திகள் என்ன என்பது குறித்து அந்த நாளிதழ் இன்று விளக்கமளித்துள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பேரணியில் முருகபெருமானின் பிறப்பு, முனிவர்களின் தவம், மற்றும் மோகினி அவதாரம் குறித்து ஆபாசப் படங்கள் இடம்பெற்றிருந்ததாக சேலம் செய்தியாளர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் 10 அடி ராமர் படம் எடுத்துச்செல்லப்பட்டதாகவும், அதை பலர் செருப்பால் அடித்துக் கொண்டிருந்ததாகவும் சேலம் செய்தியாளர் கூறியதாக இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்த பேரணியில் பெரியார் ஒரு டிராக்டரில் அமர்ந்து கடைசியாக ‌வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஊர்வலத்தின் இறுதியில் மரத்தால் செய்யப்பட்ட ராமர் உருவம் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் அப்போது வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றிருந்ததாக இந்து கூறியுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில், மற்றவர் மனைவி மீது ஆசை கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்க கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அந்நாளில் செய்தி வெளியானதாகவும் தெரிவித்துள்ளது.‌

இந்த செய்தி வெளியான பிறகு, மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக இருந்த டி.வி. சொக்கப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதாகவும் , அதில் திருமணமான ஒரு பெண் வேறொருவரை விரும்பினால் அதை குற்றமாக்கக் கூடாது என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் தாம் அளித்த தகவல் சரியானதுதான் என இந்து நாளிதழின் செய்தியாளர் விளக்கமளித்ததாகவும் பழைய செய்திகளை மேற்கோள் காட்டி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம் உள்ளிட்ட அனைத்து மத நம்பிக்கைகளையும் விமர்சிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்நாளில் செய்தி வெளியானதாக இன்றைய இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்து நாளிதழில் 1971ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தியில் அப்போதைய முதலமைச்சரான கருணாநிதியின் பேட்டி இடம்பெற்றிருந்ததாகவும், அதில் பெரியாருக்கு புரட்சிகரமாக சிந்திக்க உரிமை இருப்பதாகவும், ஆனால் அவை அனைத்தையும் செயல்படுத்த எந்த அரசும் தயாராக இருக்காது என கருணாநிதி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச ஊர்வலம் குறித்தும் அதை காவல்துறையினர் அனுமதித்தது குறித்தும் செய்திதாள்கள் மூலம் அறிந்து வருத்தப்பட்டதாக கருணாநிதி குறிப்பிட்டதாகவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இதனால் சிலர் மனம் புண்பட்டிருக்கும் என்றும் அதை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும் கருணாநிதி கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த‌ப் பேரணி குறித்து செய்தி வெளியிட்ட இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தினமணி நாளிதழ்களுக்கு எதிராக டி.வி. சொக்கப்பா வழக்கு தொடர்ந்ததா‌கவும், இது தொடர்பாக அவதூறு வழக்கு பதிவு செய்ய மெட்ராஸ் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு ரத்து செய்ததாகவும் இன்றைய இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com