செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.
இவ்விவகாரம் சர்ச்சையாகி பூதாகரமானது. முடிவில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என அறிவிக்கும் அளவிற்கு வளர்ந்தது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஆங்கில இந்து நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதிகளின் archived copy என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார்.
(அண்ணாமலை பேசிய வீடியோ, இங்கே:)
அன்றுதான் பேரறிஞர் அண்ணா பேசினார். பேசிய ஒரு ஒரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் சொன்ன ஒரு டேட்டா தவறு என சொல்லுங்கள். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” என்றார்.
இந்நிலையில் இந்து நாளிதழ் அண்ணாமலையின் கருத்து குறித்து இன்று விளக்கமளித்துள்ளது. அதில், “1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகளை ஆராய்ந்தால், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவின் நான்காவது நாளில் முத்துராமலிங்கத் தேவர் அண்ணாதுரையின் கருத்தில் முரண்பட்டார். ஆனால் அண்ணாதுரை வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயில் வளாகத்தில் வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக மதுரைத் தமிழ்ச்சங்கம் பொன்விழா ஏற்பாட்டாளர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “குறிப்புகளின்படி முத்துராமலிங்கத் தேவர் முதலில் பேச அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் சத்தம் போட்டனர். தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவரை விழா ஏற்பாட்டாளர்கள் பேச அனுமதித்ததனர்” என இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.