தமிழகத்திற்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை நாளைக்குள் உறுதிசெய்யும்படி மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு மருத்துவமனை மரணங்களுக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி மே 1, 2ஆம் தேதிகளில் 220 டன் அக்சிஜன் தமிழ்நாட்டுக்கு வந்தது என்றும், மே 2ஆம் தேதி நடந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 டன்னை முறையாக ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்
தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னிலிருந்து 60 டன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பப்படுவதாகவும். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையத்தில் 150 டன் உற்பத்தி செய்வது சென்னை மற்றும் செங்கல்பட்டிற்கு முக்கிய பங்களிப்பை செய்துவந்ததாக குறிப்பிட்டார். தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கும் அங்கிருந்து அனுப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார். தினமும் 475 டன் தேவைப்படும் என மத்திய அரசே நிர்ணயித்துள்ள நிலையில் அதை அனுப்பாததால், அதை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டுமென கோரிக்கை தெரிவித்தார். செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனரும், நோடல் அதிகாரியுமான உமாநாத் ஆஜராகி, கேரளாவில் உள்ள பாலக்காடு அருகில் கஞ்சிக்கோட்டில் உற்பத்தியாகும் 40 டன்னை தமிழக தென் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கிய நிலையில் நிறுத்திவிட்டதால், மீண்டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். தமிழகம் தெலுங்கானாவை விட்டுவிட்டு நேற்று மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். கையிருப்பு சிலிண்டர்கள் நாளை (வெள்ளி) வரை மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடும் என அச்சம் தெரிவித்தார்.