இடப்பக்கம் இருக்கவேண்டிய இதயம் வலப்பக்கம் இருக்கு! - மகனுக்கு உதவி கேட்கும் பெற்றோர்

இடப்பக்கம் இருக்கவேண்டிய இதயம் வலப்பக்கம் இருக்கு! - மகனுக்கு உதவி கேட்கும் பெற்றோர்
இடப்பக்கம் இருக்கவேண்டிய இதயம் வலப்பக்கம் இருக்கு! - மகனுக்கு உதவி கேட்கும் பெற்றோர்
Published on

மதுரையில் உறுப்புகள் இடம் மாறி பிறந்த சிறுவனுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகளுக்கான மருத்துவ செலவிற்கு உதவி செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்த பெற்றோரின் கோரிக்கை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. 

மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (37). கட்டிட வேலை செய்து வரும் இவர், ஜெயலெட்சுமி என்பவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்களுக்கு பிறந்த சபரி என்ற ஆண் குழந்தைக்கு முக்கிய உறுப்புகள் இடமாறி இருந்தது. இதனால் சபரி  கடந்த 6 வருடமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவனைகளுக்கு ஏறி இறங்கிய மாடசாமி 6 லட்சம் வரை செலவழித்துள்ளார். ஆகையால் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, தங்களது மகனின் மருத்துவ தேவைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று மதுரை ஆட்சியரிடம் அவர் தனது மனைவி மகனுடன் வந்து மனு அளித்தார். 

இது குறித்து சபரியின் பெற்றோர் கூறும் போது, “ உடலின் இடப்பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கமும், சீறுநீரகம் உள்ளிட்ட ஒரு சில உறுப்புகள் உடலில் மாறி இருக்கிறது. இதனால் சபரிக்கு காய்ச்சல், மயக்கம், தலைசுற்றல், சளி, இருமல் என தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 6 ஆறு வருடங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சபரிக்கு ஏற்பட்ட சிறு சிறு உடல்நலக்குறைவு பிரச்னைகளுக்கு இதுவரை 6 லட்ச ரூபாய் வரை செலவாகி உள்ளது.” என்றனர்.

தந்தை மாடசாமி கூறும் போது, “கூலி வேலைசெய்து வரும் என்னை நம்பியே குடும்பம் இருக்கும் சூழலில் மகனின் மருத்துவ செலவை கூட செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியரும், அமைச்சர்களும் எனது மகனின் மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com