தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்யவும், அதனை அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் 24 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரேத பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தடய அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யபட வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே தடய அறிவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக மருத்துவக் குறியீடு விதி 621 ன் படி பிரேத பரிசோதனை நடத்தபட்ட அன்றைய தினமே பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்ததாக அறிக்கை தருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை ஒரு மாதம் கழித்து தொடர்புடைய குற்றவியல் நீதித்துறைக்கு அனுப்புகின்றனர். இதனால் காலவிரயம், பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளால் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. இது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவில்லை.
எனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெறுவது இல்லை. ஒரே பிரேத அறிக்கையில் இறந்தவர் பெயர், முகவரியை மட்டும் மாற்றி மாற்றி வெல்வேறு அறிக்கையாக தருகின்றனர். உரிய மருத்துவர்கள் இல்லாததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 700 அறிக்கைகள் கையொப்பமிடாமல் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், அதனை அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வரை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் பிரேத பரிசோதனைக்கான 48 தடய அறிவியல் நிபுணர் பணியிடங்களில் 23 பேர் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அரசு மருத்துவ மனையின் அனுபவமிக்க மூத்த தடயவியல் நிபுணரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.